கொழும்பு: இலங்கையின் வடக்கு பகுதியில் செயல்படுத்தப்படும் வீடு கட்டும் திட்டத்திற்கு இந்தியா அளித்து வரும் ஆதரவு குறித்து இலங்கை பெருமிதம் வெளியிட்டுள்ளது.
கடந்த 2009ம் ஆண்டு நடந்த இறுதி கட்ட போருக்குப்பின், இலங்கையின் வடக்கு பகுதியில் 4 ஆயிரம் வீடுகள் கட்டும் பிரமாண்ட திட்டத்தை இலங்கை அரசு துவக்கியது. இதற்கு இந்தியா பெருமளவு நிதி உதவி செய்து வருகிறது. இத்திட்டத்திற்காக இதுவரை ரூ. 1372 கோடியை இந்தியா வழங்கியுள்ளது.
இந்தியாவுக்கு வெளியே செயல்படுத்தப்படும் மிகப்பெரிய வீடு கட்டும் திட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2010ம் ஆண்டு இந்தியா வந்த இலங்கை அதிபர் ராஜபக்சே, இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் 50 ஆயிரம் வீடுகள் கட்டும் திட்டத்திற்கு உதவும்படி வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து, இந்த நிதியுதவியை இந்தியா வழங்கியுள்ளது.
பட்டிகாலோ மற்றும் அம்பாரை மாவட்டங்களில் நடக்கும் இத்திட்டத்தின் துவக்கவிழாவில் பேசிய இலங்கையின் பொருளாதார வளர்ச்சி அமைச்சர் பசில் ராஜபக்சே, இலங்கையில் மனிதாபிமான அடிப்படையில் செயல்படுத்தப்படும் திட்டங்களில் இந்தியா பெரும் பங்களிப்பு வழங்கி வருகிறது. இந்தியாவின் வீடு கட்டும் திட்டத்திற்கான உதவி குறிப்பிட்ட ஒரு எல்லைக்குள் இல்லாத அளவு மிகப்பெரியதாக உள்ளது என பெருமிதம் தெரிவித்தார்.
இவ்விழாவில் பேசிய இலங்கைக்கான இந்திய தூதர் கந்தா, இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் மறு குடியேற்றத்தை விரைவாக செயல்படுத்த இந்தியா உறுதிபூண்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், தற்போது பணிகள் சிறப்பாக நடைபெறுவதாகவும் அவர் திருப்தி தெரிவித்தார்.
Post a Comment