சின்ன வெங்காயம் மற்றும் தக்காளி வரத்து குறைவு காரணமாக, 20 நாட்களில் விலை எகிற வாய்ப்பிருப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
சின்ன வெங்காயத்திற்கு எண்ணற்ற மருத்துவ குணங்கள் உண்டு. அசைவ உணவிற்கு, கூடுதல் சுவை தருவது சின்ன வெங்காயம். சைவம் மற்றும் அசைவ உணவில், சின்ன வெங்காயத்தின் பங்கு அளப்பரியது.
சமையலில் தனி இடம்பெற்ற சின்ன வெங்காயத்தின் வரத்து குறைந்ததால், இன்று அதன் விலை, உரிக்காமலேயே கண்ணீர் வரவழைத்துவிடுகிறது. அந்த அளவிற்கு, உயர்ந்து கொண்டு வருகிறது.
சின்ன வெங்காயத்திற்காக, கோவை மாவட்டம் நம்பி இருப்பது பல்லடம், செஞ்சேரிமலை, தாராபுரம், குண்டடம், உடுமலை வட்டத்தில், 150 முதல் 200 கி.மீ., சுற்றளவிலுள்ள ஊர்களைத்தான். முன்பு ஒரு குறிப்பிட்ட சீசனில்தான், சின்ன வெங்காயம் பயிரிடுவர்.
இப்போது, நிலைமை அப்படி இல்லை
ஒரு போகம் முடிந்து, நிலம் காலியானவுடன் அடுத்த பயிரைப் போட்டு விடுகின்றனர். இதனால், ஆண்டு முழுவதும் சின்ன வெங்காயம் பயிரிடப்படுகிறது; இது, 60 முதல் 70 நாள் பயிராகும். ஜனவரியில் துவங்கினால், மூன்று மாதங்களுக்கு, பல்லடம் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் இருந்து சின்னவெங்காயம் வரும். அதன்பிறகு, நாமக்கல், ராசிபுரம், தமிழக எல்லைப் பகுதிகளில் உள்ள சாம்ராஜ்நகர், தாளவாடி மற்றும் கர்நாடகா மாநிலத்தில் இருந்து சின்ன வெங்காயத்தின் வரத்து இருக்கும்.
மூன்று மாதத்திற்கு ஒருமுறை, ஒரு பகுதியைவிட்டு ஒரு பகுதியில் இருந்து மார்க்கெட்டிற்கு வந்து கொண்டிருக்கும். தவிர, கோவையின் மேற்கே உள்ள ஆலாந்துறை, தொண்டாமுத்தூர் போன்ற பகுதிகளில் இருந்தும் வருகிறது.சின்ன வெங்காய பயிருக்கு முக்கியத் தேவை தண்ணீர்.
நீர் இல்லை என்றால் விளைச்சல் இருக்காது. பருவ மழை பெய்யாத காரணத்தால், சின்ன வெங்காய விளைச்சல் நடப்பாண்டில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆறு மாதத்திற்கு முன், கட்டுப்படியாகும் விலையில் விற்கப்பட்ட சின்ன வெங்காயம், இப்போது, உச்சத்தைத் தொட்டுக் கொண்டிருக்கிறது.
கோவை மேட்டுப்பாளையம் ரோடு, எம்.ஜி.ஆர். மொத்த காய்கனி வியாபாரிகள் சங்கச் செயலாளர் அப்துல் அஜீஸ் கூறியதாவது:நல்ல பருவ காலத்தில், ஒருநாளைக்கு 50 கிலோ எடை கொண்ட சின்ன வெங்காயம், 4,000 மூட்டைகள் வரும்.
ஆனால், இப்போது, 1,500 முதல் 2,000 மூட்டைகள் வரை தான் வருகின்றன. இரண்டு வாரத்திற்கு முன், மொத்த விற்பனை விலையில், கிலோ 40 முதல் 50 ரூபாய் விற்ற சின்ன வெங்காயம், 45 முதல் 60 ரூபாய் என உயர்ந்து, இன்று (நேற்று) கிலோ 50 முதல் 70 ரூபாய் விற்கப்படுகிறது; இந்த விலையும் நிரந்தரமில்லை.
நாமக்கல், ராசிபுரம் சுற்றுப்புற ஊர்களில் இருந்து மாறி மாறி சின்ன வெங்காயம் வரும். இப்போது, நாமக்கல் சின்ன வெங்காயம்
தான் கைகொடுத்துக் கொண்டிருக்கிறது. இது 20 நாள் வரை தான் கிடைக்கும். அங்கு விளைச்சல் முடிந்துவிட்டது. சாம்ராஜ்நகர், தாளவாடி மற்றும் கர்நாடகாவில் சின்ன வெங்காயம் அறுவடை செய்யும் நிலைக்கு வந்துள்ளது. அங்கிருந்து வந்தால்தான், விலை குறையும். உள்ளூர் விளைச்சலைக் கொண்டுதான் சமாளிக்கிறோம். இல்லையென்றால், விலை கிலோவுக்கு 100 ரூபாயைத் தொட்டு விடும்.பெரிய வெங்காயம் மட்டும்தான், அதன் தரத்தைப் பொறுத்து மொத்த விற்பனையில் கிலோ 13 முதல் 17 ரூபாய் வரைக்கும் உள்ளது.
தக்காளி நிலவரம்
தக்காளியின் வரத்தும் குறைந்துவிட்டது. ஆப்பிள் தக்காளி (25 கிலோ) டிப்பர் 750 ரூபாய்க்கும், நாட்டுத் தக்காளி டிப்பர் 1000ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இன்றைய (நேற்றைய) மொத்த விலையில் ஆப்பிள் தக்காளி கிலோ 35 ரூபாய், நாட்டுத் தக்காளி 40 ரூபாய் வரைக்கும் விற்பனையில் உள்ளது.
தக்காளியும் 60நாள் பயிர் தான். இதன் விலையும் அதிகரிக்கும். இவ்வாறு, அப்துல் அஜீஸ் கூறினார்.மொத்த விற்பனையைவிட, சில்லரை விற்பனைக்கடைகளில், இதன் விலை சற்று அதிகரித்திருக்கும்.
"சிக்' வெங்காயம்
கர்நாடகா மாநிலம் சிக்பெலாபூரில் இருந்து, வைலட் நிறத்தில் சின்ன வெங்காயம் வருகிறது. இது "சிக் வெங்காயம்' என்றழைக்கப்படுகிறது. இதன் சுவை சின்ன வெங்காயம் போல் தான் இருக்கும். இவை, கோவைக்கு சுமார் 10 ஆயிரம் கிலோ வரை வருகிறது. கிலோ 15 முதல் 25 ரூபாய் வரை விற்கப்படுகிறது. தள்ளுவண்டிகளில் விற்போரிடம், இந்த சின்னவெங்காயத்தைப் பார்க்கலாம்; விலையும் குறைவு.
Post a Comment