மும்பை:தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்துள்ளதால், தங்கம் வாங்குவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடும் போது, இன்று, அட்சய திரிதியை நாளில் மட்டும், 8,000 கிலோ தங்கம் கூடுதலாக விற்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இன்று, அட்சய திரிதியை. இந்நாளில், தங்கம் வாங்குவது சிறப்பானதாகக் கருதப்படுகிறது. கடந்தாண்டு, தங்கத்தின் விலை அதிகம் இருந்ததால், நகைக் கடைகளில் பொதுமக்கள் கூட்டம் குறைந்து காணப்பட்டது.
தற்போது, தங்கத்தின் விலை, கடந்த ஒரு மாதமாக, சவரனுக்கு, 4,000 ரூபாய் வரை குறைந்து இருப்பதால், பொதுமக்களிடம், அதிக மகிழ்ச்சியை பார்க்க முடிகிறது.
நகைக் கடைகளில் நேற்று முதல், மக்கள் கூட்டம் அலை மோதியது. அட்சய திரிதியை முன்னிட்டு, நெரிசலைத் தவிர்க்க, முன்கூட்டியே தங்கம் வாங்க, பலரும் ஆர்வம் காட்டினர்.
அகில இந்திய ஆபரண தங்க நகை வர்த்தக கூட்டமைப்பு தலைவர், ஹரேஷ் சோனி கூறியதாவது:
இந்த தடவை, தங்க ஆபரணங்கள், தங்க காசுகள் விற்பனை, 25 சதவீதம் அதிகரிக்கும். தமிழகம் உட்பட தென் மாநிலங்களில், வழக்கத்தை விட, அதிக அளவில் தங்கம் விற்பனை இருக்கும்.
கடந்த ஆண்டு, அட்சய திரிதியை சமயத்தில், தங்க ஆபரணங்கள் மற்றும் காசுகள், 17 ஆயிரம் கிலோ விற்பனையானது. இந்த ஆண்டு, அதன் அளவு கூடுதலாக 8,000 கிலோ அதிகரித்து, 25 ஆயிரம் கிலோ என்ற அளவை, நாடு முழுவதும் எட்டும் என, எதிர்பார்க்கிறோம்.
இது, மகிழ்ச்சி தரும் செய்தி,என்றார்.
தங்கம் விலை குறைவாக இருப்பதால், எப்போதும் இல்லாத வகையில், மதுரை, திண்டுக்கல்,தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் உள்ள நகைக்கடைகளிலும், நேற்று முன்தினம் முதலே, கூட்டம் அலைமோதியது.
பலர் தங்களுக்கு தேவையான நகையைத் தேர்ந்தெடுத்து, முன்பதிவு செய்தனர்.
அதிக கண்காணிப்பு: நேற்றைய நிலவரப்படி, சென்னையில், 22 காரட் ஆபரண தங்கம், கிராம், 2,559 ரூ.க்கும், சவரன் ஒன்று, 20,472 ரூ.க்கும் விற்கப்பட்டது.
சொக்க தங்கம், 24 காரட், ஒரு கிராம், 2,737 ரூபாய்க்கும், 10 கிராம், 27,370 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
வெள்ளி, ஒரு கிராம், 48.60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. அட்சய திரிதியை முன்னிட்டு, விலையில் மாற்றம் இருக்குமா என்பது, இன்று காலை, தெரியவரும்.
இதுகுறித்து, நகை வியாபாரி ஒருவர் கூறுகையில், "சென்னையில், இன்று வரை (நேற்று), 800 கிலோ தங்கம் விற்பனையாகியுள்ளது. நாளை (இன்று), இது 1,000 கிலோவாக உயரும் என,எதிர்பார்க்கப்படுகிறது.
கடைகளில் வாடிக்கையாளர்களை வரவேற்கவும், அவர்களை கவரவும் பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தியுள்ளோம்' என்றார்.
சென்னையில், தி.நகர், புரøŒவாக்கம் மற்றும் என்.எஸ்.சி.,போஸ் சாலை பகுதிகளில், அதிகளவில் நகைக் கடைகள் உள்ளன. இப்பகுதிகளில், 500க்கும்மேற்பட்ட போலீசார், பாதுகாப்புக்காக பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.
கண்காணிப்பு கேமராக்கள் ஆங்காங்கே பொருத்தப்பட்டு, கட்டுப்பாட்டறையில் இருந்தும், வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் மூலமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
நடைபாதை கடைகளை அப்புறப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Post a Comment