புதுடில்லி:"பெண்களுக்கு எதிரான குற்றங்களில், ஈடுபடும் சிறுவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், சிறாருக்கான வயது வரம்பை, 18லிருந்து 16 ஆக குறைக்க வேண்டும்,' என, பார்லிமென்ட் குழு பரிந்துரை செய்துள்ளது.
அதிர்ச்சி அலை:
டில்லியில், ஓடும் பேருந்தில் மருத்துவக் கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பலியான சம்பவம், நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக, ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். இதில் ஒருவன், திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டான்.
மருத்துவக் கல்லூரி மாணவி மீது, ஆறு பேர் கும்பல் நடத்திய மிருக தாக்குலில், முக்கியமாக செயல்பட்டவன் சிறார் என்பதால், சிறார் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டு உள்ளான்.
டில்லி சம்பவம், பெரும்பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதால், சிறார் வயதை, 18லிருந்து, 16 ஆக குறைக்க வேண்டும் என, அனைத்து தரப்பில் இருந்தும் கோரிக்கை எழுந்துள்ளது.
இந்த நிலையில், பெண்கள் மேம்பாட்டுக்கான பார்லிமென்ட் கமிட்டி, குறிப்பாக ஆண்கள் சிறார் வயதை, 16 ஆக நிர்ணயிக்க வேண்டும் என, பரிந்துரை செய்துள்ளது.
அதிகரிப்பு:
பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும், சிறார்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. 2010ல், பெண்களுக்கு எதிராக நடந்த பாலியல் குற்றங்களில், சிறார்கள் சம்பந்தப்பட்ட வழக்குகள் மட்டும், 22 ஆயிரத்து 740.
இந்த எண்ணிக்கை, 2011ல், 25 ஆயிரத்து 125 ஆக அதிகரித்தது. குறிப்பாக, 16 வயதிலிருந்து, 18 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் புரிந்த குற்றங்கள் அதிகமாக உள்ளன.
நிர்ணயம்:"சிறார்கள் நீதி சட்டம்- 1986' படி, ஆண் சிறார், 16 வயதுக்கு உட்பட்டவராகவும், பெண் சிறார், 18 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும் என, நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.
இந்த சட்டம், 2000ல் திருத்தம் செய்யப்பட்டது. ஆண், பெண் என, பாகுபாடின்றி, சிறார்கள் வயது, பொதுவாக, 18 என, நிர்ணயிக்கப்பட்டது.
தற்போது, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவது கவலையளிக்கும் விதத்தில் உள்ளது. அவ்வாறு குற்றம் புரிந்தவர்கள் மீது, குற்றங்களுக்கான காரணிகள் பல சொல்லப்பட்டன.
இந்த நிலையில், மகளிருக்கான மேம்பாடு குறித்த பார்லிமென்ட் கமிட்டி, பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் குற்றங்கள் குறித்து எச்சரிக்கை செய்துள்ளது.
எனவே, சிறார்கள் என்பதை முடிவு செய்ய, வயது வரம்பை, 16 ஆக குறைக்க வேண்டும் என, அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
Post a Comment