திருநெல்வேலி: கூடங்குளம் அணுமின்நிலையத்தில், மின்உற்பத்திக்கான பணிகள், நேற்று நள்ளிரவில் துவங்கின. நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில், ஒவ்வொன்றும் 1000 மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட, இரண்டு அணுஉலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
முதலாவது உலையில், உற்பத்தியை துவக்கிய போது, பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டன. கடந்த 2012 செப்டம்பரில், முதல் அணு உலையில் எரிபொருள் நிரப்புவதற்கான அனுமதி வழங்கப்பட்டது. எரிபொருள் நிரப்பும் பணி நிறைவடைந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக, உற்பத்தி தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில், முதலாவது உலையில் உற்பத்தியை துவக்க, அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்தது. இதன்படி, நேற்று நள்ளிரவு 11.50 மணிக்கு, செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை எரிபொருளாக கொண்டு, உற்பத்தி துவங்கியது.
அணுபிளவின் வெப்பத்தால், ஏற்படுத்தப்படும் நீராவியின் மூலம், "டர்பன்' களை சுழலச்செய்து, மின்உற்பத்தி செய்யப்படும். பணிகள் துவங்கினாலும், முழு உற்பத்தி கிடைக்க, சில நாட்கள் ஆகும்.
ஏ.இ.ஆர்.பி., அனுமதி:
முன்னதாக, கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் பிரிவு செயல்பட, அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையமான, ஏ.இ.ஆர்.பி., அனுமதி வழங்கியுள்ளது.
இதுதொடர்பாக, அந்த ஆணையத்தின் செயலர் பட்டாச்சார்யா கூறியதாவது: கூடங்குளம் அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு தொடர்பாக, சமீபத்தில் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வின் அடிப்படையில், அணுமின் நிலையம் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக, அணுக்களை பிளக்கும் நடவடிக்கைகள் துவங்கும். அதன்பின், மற்ற நடவடிக்கைகள் தொடரும். அணு உலையின் செயல்பாடுகளை உறுதி செய்ய, பல கட்ட சோதனைகள் நடத்தப்படும். அந்த சோதனையின் அடிப்படையிலேயே, மின் உற்பத்திக்கான அடுத்தடுத்த அனுமதி வழங்கப்படும்.
இவ்வாறு பட்டாச்சார்யா கூறினார். கூடங்குளம் அணுமின் நிலையத்தின் இயக்குனர் சுந்தர் கூறுகையில், ""அணுமின் நிலையம் செயல்பட, அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
இன்னும் சில, நடைமுறைகளை பின்பற்ற வேண்டியுள்ளது. அதன்பின், 45 நாட்களில், கூடங்குளம் அணுமின் நிலையத்தில், மின் உற்பத்தி துவங்கும். இவ்வாறு சுந்தர் கூறினார்.
Post a Comment