என் ஏ ஏ சி என்று சொல்லப்படும் கல்வித் தர மதிப்பீடு மற்றும் அங்கீகாரத்துக்கான அமைப்பின் அங்கீகாரத்தை சென்னை பல்கலைக்கழகம் இழந்துள்ளது.
உயர்கல்வி வழங்கும் ஒரு கல்வி நிறுவனத்துடைய கல்வித் தரத்தின் அளவுகோலாக நேஷனல் அஸெஸ்மெண்ட் அண்ட் அக்ரெடிடேஷன் கவுன்சில் என்ற அமைப்பின் அங்கீகாரம் பார்க்கப்படுகிறது.
சென்னை பல்கலைக்கழகத்துக்கு இந்த கவுன்சில் வழங்கியிருந்த ஐந்து ஆண்டுகால அங்கீகாரம் கடந்த மார்ச் மாதம் காலாவதியாகியதை தற்போதைய துணைவேந்தர் தாண்டவம் உறுதிசெய்டுள்ளார்.
சென்னைப் பல்கலைக்கழகத்துக்கு 2007ல் இந்த அமைப்பு ஏ ரேட்டிங் என்ற உயரிய கல்வித் தர அங்கீகாரத்தை வழங்கியிருந்தது.
தற்போது இந்த அங்கீகாரம் இல்லாத நிலையில், சென்னைப் பல்கலைக்கழகம் பாதிப்புகளைச் சந்திக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
நிதி பெறுவதில் பிரச்சினைகள் ஏற்படுவது, தரவரிசைப் பட்டியலில் இடம்பிடிக்க முடியாமல் போவது, படித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு குறைந்துபோவது போன்ற பாதிப்புகள் ஏற்படலாம் என்று கவலை தெரிவிக்கப்படுகிறது.
இது பற்றி தமிழோசைக்கு பேட்டி அளித்த சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் சாதிக், என் ஏ ஏ சி அமைப்பின் அங்கீகாரம் புதுப்பிக்கப்படவில்லை என்பதை அந்த அமைப்பு அங்கீகாரம் வழங்க மறுத்துவிட்டது என்பதுதாகப் புரிந்துகொள்ளக்கூடாது என்று விளக்கினார்.
இந்த அமைப்பின் பிரதிநிதிகளை அழைத்து ஆய்வுகளை நடத்தச் செய்வதன் மூலம் மீண்டும் உயரிய தரத்துடனான அங்கீகாரத்தை சென்னை பல்கலைக்கழகம் பெற முடியும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
பட்டம் வழங்க தாமதம்
இதனிடையே, சென்னைப் பல்கலைக்கழகம் பட்டமளிப்பு விழாக்களை நடத்துவதில் பெரிய தாமதம் ஏற்பட்டுவருவதாகவும், இதனால் படித்த படிப்புக்கான பட்டங்களைப் பெறமுடியாமல் மாணவர்கள் பாதிப்புக்குள்ளாவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
துணைவேந்தர் மாற்றம், வேந்தராக அமைந்திருக்கின்ற ஆளுநரின் மாற்றம் போன்ற காரணங்களால் பட்டமளிப்பு விழாக்களை நடத்துவதில் இப்படியான தாமதம் ஏற்படுகிறது என்று இவ்விவகாரம் பற்றி கருத்து தெரிவித்த பேராசிரியர் சாதிக் கூறினார்.
பட்டம் இல்லாவிட்டாலும் பல்கலைக்கழகம் வழங்கும் இடைக்கால கல்விச் சான்றிதழைக் கொண்டு வேலை தேட முடியும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
முதல்வர் போன்ற அரசியல் தலைவரை அழைத்து பட்டமளிப்பு விழா நடத்த வேண்டும், அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க வேண்டும் என்பது போன்ற அரசியல் காரணங்களினாலும் சில நேரங்களில் பட்டமளிப்பு விழா தாமதமாகிறது என்பதை அவர் ஒப்புக்கொண்டார்.
Post a Comment