சென்னை: தி.மு.க., என்ற உருவத்தை யாராலும், ஒன்றும் செய்ய முடியாது,'' என, அக்கட்சியின் தலைவர் கருணாநிதி பேசினார்.மறைந்த தொ.மு.ச., பேரவைத் தலைவர் குப்புசாமி உருவப்படத்தை, அறிவாலயத்தில், கருணாநிதி நேற்று திறந்து வைத்து பேசியதாவது;
தி.மு.க., என்ற உருவத்தை ஒன்றும் செய்ய முடியாது
நண்பர்களை ஒன்றல்ல, இரண்டல்ல, பலரை இழந்திருக்கிறேன். 90வது வயதை நெருங்கிக் கொண்டிருக்கிற நான், எவ்வளவு நண்பர்களைப் பெற்றிருந்தேன், எவ்வளவு நண்பர்களை இழந்திருப்பேன் என்பதையெல்லாம் எண்ணிப் பார்த்தால், எனக்கு இருக்கிற ஒரேயொரு நம்பிக்கை, எத்தனை பேர் நம்மை விட்டு பிரிந்தாலும், எத்தனை பேர் நம்மை விட்டு மறைந்தாலும், அவர்கள் உருவாக்கி வைத்து விட்டுப் போயிருக்கிற, தி.மு.க., என்ற இந்த உருவத்தை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது.
குப்புசாமி விட்டுச் சென்றுள்ள பணிகளை, நாம் விடாமல் தொடர்ந்து, நிறைவேற்றுவது தான் நாம் அவருக்கு ஆற்றுகிற கடமை; காட்டுகின்ற நன்றி.
அப்போது தான் அவருடைய "ஆத்மா', சாந்தியடையும் என்றல்லாம் நான் சொல்ல மாட்டேன். ஏனென்றால், எனக்கு, "ஆத்மா'வில் நம்பிக்கை கிடையாது.
ஆகவே, அவருடைய புகழ் நிலைத்து நிற்க வேண்டும். எல்லோரும் ஒற்றுமையாக இருந்து, அவருடைய எண்ணங்களை வெற்றிகரமாக நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு, கருணாநிதி பேசினார்.
Post a Comment