கொல்கத்தா: பிரபல வங்காள இயக்குநர் ரிதுபர்னோ கோஷ் 49 வயதில் கொல்கத்தாவில் மரணமடைந்தார்.
கணைய பாதிப்பால் அவதிப்பட்ட அவர், மாரடைப்பால் மரணத்தைத் தழுவியதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தாவில் 1963-ம் தேதி பிறந்தவர் ரிதுபர்னோ கோஷ். இவரது தந்தை ஒரு டாக்குமென்டரி பட இயக்குநர். தாயாரும் திரைத் துறையைச் சேர்ந்தவரே.
1994-ல் ஹிரேர் அங்டி என்ற வங்க மொழி படத்தின் மூலம் தனது திரையுலக வாழ்க்கையைத் தொடங்கினார் ரிதுபர்னோ கோஷ். அதே ஆண்டில் யுனிஷே ஏப்ரல் என்ற படத்தை இயக்கினார். இந்தப் படத்துக்கு சிறந்த படத்துக்கான தேசிய விருதும், அதில் நடித்த தேபஸ்ரீ ராய்க்கு சிறந்த நடிகைக்கான விருதும் கிடைத்தன.
அதன் பிறகு ரிதுபர்னோ கோஷ் இயக்கிய அத்தனை படங்களும் ஏதாவது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பிரிவுகளில் ஆண்டு தோறும் விருது பெறுவது வழக்கமாகிவிட்டது.
ரிதுபர்னோ கோஷ் படமா... இந்த ஆண்டு நிச்சயம் ஒரு தேசிய விருது உண்டு எனும் அளவுக்கு மிகச் சிறந்த படங்களை அவர் உருவாக்கினார்.
இதுவரை அவர் 19 படங்களை இயக்கியுள்ளார். இவற்றில் இரண்டு இந்திப் படங்கள், மற்றவரை வங்காளப் படங்கள். இவற்றில் 16 படங்கள் 19 தேசிய விருதுகளைப் பெற்றுள்ளன!
அபோஹோமன் என்ற படத்துக்காக ரிதுபர்னோ கோஷ் சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதினைப் பெற்றார்.
Watch Video:
இயக்கத்தோடு நில்லாமல், நான்கு படங்களிலும் நடித்துள்ளார் ரிதுபர்னோ கோஷ். அவற்றில் ஒரு ஒரிய மொழி படமும் அடங்கும்.
49 வயதில் அகால மரணத்தை ரிதுபர்னோ கோஷ் தழுவியிருப்பது இந்தியத் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்றால் அது மிகையற்ற வார்த்தைதான்.
பெருமளவு படங்களை அவர் வங்க மொழியில் உருவாக்கினாலும் அவற்றின் தாக்கம் இந்தியா முழுக்க விரவியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Post a Comment