திமுக தலைவர் மு கருணாநிதி அரசுப்பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வியை அறிமுகம் செய்வது என்ற தமிழக அரசின் முடிவிற்குக் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
ஏற்கெனவே சோதனை முயற்சியாக 320 அரசுப் பள்ளிகளில், முதல் மற்றும் ஆறாம் வகுப்புகளில் தொடங்கப்பட்ட ஆங்கில வழி வகுப்புகளை விரிவுபடுத்த இருப்பதாக அண்மையில் மாநிலக் கல்வி அமைச்சர் வைகைச்செல்வன் அறிவித்திருந்தார்.
தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகள் சமச்சீர் கல்வி அறிமுகமான பின் பாடத் திட்டத்தைப் பொறுத்தவரை தனியார் பள்ளிகளும், அரசுப் பள்ளிகளும் சமநிலையிலேயே உள்ளன. எனவே அரசுப் பள்ளிகளின் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி, வளர்த்து, தரமான கல்வி வழங்குவதே கல்வி நிலையை உயர்த்த வழி என்றும் கருணாநிதி வாதிட்டிருக்கிறார்.
மத்திய அரசு நடத்தும் வேலை வாய்ப்புக்கான தேர்வுகள் அனைத்தையும் தமிழிலும் நடத்திட வேண்டும்; சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு மொழியாக தமிழ் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்ற முற்போக்குக் கொள்கைகள் வலிவு பெற்று வரும் இந்தக் காலக் கட்டத்தில் திடீரென்று அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி என்பது தேவையில்லாத சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என எச்சரித்திருக்கிறார்.
பத்திரிகையாளர் அருண் ஆங்கில வழிக் கல்விக்கு பரவலான ஒரு ஆதரவு இருக்கிறது இந்நிலையில் பெற்றோரின் விருப்பத்தைக் கருத்தில் கொண்டே இப்போதைய விரிவாக்க முடிவு என்கிறார்.
கிராமப்புற அரசுப் பள்ளிகளில்தான் கட்டமைப்புவசதிகள் போதிய அளவு இல்லை, அதுவும் வலுப்படுத்தப்பட்டே வருகிறது எனவும் அருண் கூறினார். ஆங்கில வழிக்கல்வி எழும் எதிர்ப்பைப் பற்றி கூறுகையில் அவர் அரசியல்வாதிகள் வீட்டுப் பிள்ளைகளே ஆங்கில வழியில்தான் கல்வி பயில்கின்றன, இது குறித்து ஒரு வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டால் எதிர்ப்பு தானாக அடங்கும் என்கிறார்.
ஆனால் குறிப்பிடத்தகுந்த கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு தாய்மொழி வழிக்கல்வியே சிறந்தது என வாதிடுகிறார். பொதுமக்களின் விருப்பத்தின்பேரிலேயே இப்படி ஒரு முடிவு என கூறப்படுகிறதே எனக்கேட்டபோது கஜேந்திரபாபு மக்கள் விருப்பத்தின் அடிப்படையில் அல்ல, மாறாக அவர்கள் நலனுக்கு எது உகந்தது என்பதை சீர்த்துக்கியே அரசு எந்தவொரு முடிவையும் எடுக்கவேண்டும் என பதிலளித்தார்.
Post a Comment