புதுடில்லி: "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு குறித்த விசாரணை நடத்திய, பார்லி.,கூட்டு குழுவான - ஜே.பி.சி., தன் வரைவு அறிக்கையில் பிரதமர் மன்மோகன் சிங், நிதி அமைச்சர் சிதம்பரத்திற்கு, நற்சான்று வழங்கியுள்ளது.
மத்திய தொலை தொடர்புத் துறை அமைச்சராக, தி.மு.க.,வைச் சேர்ந்த ராஜா இருந்த போது, 2008ல், "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில், அரசுக்கு, 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக, மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி அறிக்கையில் கூறி இருந்தார். இது தொடர்பாக விசாரிக்க சி.பி.ஐ.,க்கு உத்தரவிடப்பட்டது. மேலும், ஜே.பி.சி., விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், ஸ்பெக்ட் ரம் முறைகேடு விசாரணையின், வரைவு அறிக்கையை, ஜே.பி.சி., நேற்று தாக்கல் செய்தது. அதில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான கொள்கை முடிவை மாற்றும்படி, பிரதமர் மன்மோகன் சிங்கும், நிதி அமைச்சர் சிதம்பரமும், ராஜாவிடம் சொல்லவில்லை.
இதில், இருவருக்கும் தொடர்பு இல்லை என, குறிப்பிடப்பட்டுள்ளது. முதலில் வருபவருக்கே முன்னுரியை என்ற அடிப்படையில், சில கம்பெனிகளுக்கு சாதகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டது. இவ்வாறு சாதகமாக செயல்பட்டதற்கு, பிரதமரும், நிதி அமைச்சரும் பொறுப்பில்லை. இருப்பினும், மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி அறிக்கையில் குறிப்பிட்டு இருந்த, 1.76 லட்சம் கோடி தொகைக்கும், ஜே.பி.சி., குறிப்பிட்டுள்ள தொகைக்கும் மாறுபாடு உள்ளது.
Post a Comment